டெல்லி: பசு மாடுகள் குறித்து மக்களிடையே புரிதலை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 25ந்தேதி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட இருப்பதாக  ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான ஆன்லைன் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா அறிவித்துள்ளார்.

மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, “பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை” பேணிகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு சார்பில்,   பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே நாட்டு பசுக்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அது சார்ந்த தொழில் வாய்ப்புகள்,  குறித்து புரிந்துகொள்ளும் வகையில் இந்த தேர்வை நடத்துவதாக தெரிவித்து உள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும்,  மக்களிடைய பசுக்கள் குறித்து  புரிதலை ஏற்படுவதை நோக்கமாக கொண்டே  இந்த தேர்வு முதல் முறையாக நடத்தப்படுகிறது. அதன்படி  அடுத்த மாதம் (பிப்ரவரி)  25ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்வை  பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என யார் வேண்டும் என்றாலும்  கட்டணமின்றி எழுதலாம் என்றும், சிறந்த முறையில் பதில் அளிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.