பொதுத் துறைக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயுவை எடுத்து முறைகேடாக விற்பனை செய்ததற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான பிபி மற்று நிகோ ஆகியவை மத்திய அரசுக்கு 1.55 பில்லியன் டாலர் இழப்பீடு அளிக்கவேண்டும் என்று நீதிபதி ஷா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

rilongc

ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஊடுறுவி மார்ச் 2016 வரையிலான 7 ஆண்டுகளில் முறைகேடாக எரிவாயுவை எடுத்து விற்றதற்காக மத்திய எண்ணை அமைச்சகம் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கும் 1.47 பில்லியன் டாலர்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான குழுவை நியமித்திருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஷா தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி தனது விசாரணை அறிக்கையை எண்ணெய் அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
அதில், ஓ.என்.ஜி.சி.-க்கு சொந்தமான எண்ணெய் வயல்களுக்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஊடுருவி கடந்த 7 ஆண்டுகளாக எரிவாயுவை எடுத்து விற்பனை செய்தது முற்றிலும் நியாயமற்ற செயல். இதற்காக அந்த நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகை மத்திய அரசுக்குத்தான் வழங்கப்படவேண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து 1.55 பில்லியன் டாலர் இழப்பீடு கோரி மத்திய எண்ணெய் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.