லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் சொல்கிறது, என்றும், லோக் ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
a
இது குறித்து  தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருகிணைப்பாளர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழக சட்டபேரவை ஆளுநர் உரையில் லோக்பால் சட்டத்தில் குறிப்பிட்ட சட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் இயற்றிய பிறகு உரிய சட்ட வரைமுறையை வகுத்து தமிழ்நாட்டில் லோக்ஆயுக்தா கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போகாத ஊருக்கு  வழி காட்டுவதாகும்.
அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் முதல் பலர் தொடர்ந்து  லோக்பால் சட்டம் கொண்டு வர  வேண்டும் என்று போராடியும் ஊழல் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி அரசுகள் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கொண்டு வர தயாராக இல்லை என்பதை உலகே அறிந்திருக்கும் நிலையில்  பாராளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றிய பிறகு லோக்ஆயுக்தா கொண்டு  வருவோம் என்று கூறியிருப்பது கண்டிக்கதக்கது.
தமிழக அரசு மக்களை இனியும் ஏமாற்றாமல் இந்த சட்டசபை தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கேட்டுக்கொள்கிறது.
ஊழல் ஒழிப்பு சட்டம்  லோக் ஆயுக்தா தமிழக அரசு கொண்டு வரும் வரை தமிழக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராடும்.
உடனடியாக லோக் ஆயுக்தாவை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்திவரும் ஜுன் 23ம் தேதி, ஒரு நாள் அறவழி உண்ணாவிரத போராட்டம்  சென்னையில் நடைபெறும்” என்று அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.