கொழும்பு:

லங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்கிறது என்று  அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாத அமைப்பினரால் நடத்தப் பட்டது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர செயலை செய்தவர்கள் நாங்கள்தான் என்று  ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அதிபர் சிறிசேனா கூறியதாவது,

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பேற்பதாக தெரிவித்தவர், ஏப்ரல் 4ம் தேதியே குண்டு வெடிப்பு அசம்பாவிதம் ஏற்படப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருந்தும், அதை கோட்டை விட்டதாலேயே இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் தமது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய தவறியதால், அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டதாகவும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக  இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மதகுரு ஜக்ரன் ஹஸிம் இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர் இருக்கிறார்கள் என்று கூறியவர், அவர்களில்  70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

குண்டுவெடிப்பு காரணமாக  இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம், அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று என இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக முடக்கப்படும் என்றும் எச்சரித்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா,  சமூக வலைத்தள நிர்வாகிகளை இன்றைய தினம் நான் சந்திக்க இருப்பதாகவும், போலியான செய்திகள் பரவாமல் கட்டுப்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால்  சமூக வலைத்தளங்களை முழுமையாக தடை செய்து விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.