கொழும்பு:

லங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, 39நாடுகளுக்கான  விசாவை தற்காலிகமாக இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில்  நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம்  காரணமாக, 39 வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.

இது தொடர்பாக அறிவித்துள்ள  இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா,  ‘நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பிட்ட 39 நாடுகளுக்கு இலங்கைக்கு வந்து விசா பெற்றுக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு  அந்த நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

குண்டுவெடிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில், வெளிநாட்டின் சதி இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியவர், சில நாடுகள் அவர்களுக்கான விசா வசதியை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர்.  அதை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்றவர், குறிப்பிட்ட  39 நாடுகளுக்கு அளித்து வந்த விசா வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த  3 மாதங்களில் மட்டும் 7.40 லட்சம் வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்துள்ளதாக கூறியவர், கடந்த ஆண்டில்  4.5 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு  வந்திருப்பதாகவும் கூறினார்.