சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தமிழக அரசின் பதிவுத்துறை அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் 6,892 ஏக்கர் அரசு நிலத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில், 63 அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், 9 அதிகாரிகள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நில மோசடி குறித்த விவரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சில விவரங்கள் பெற்று வெளியிட்டார். அதன்மூலம், போலி ஆவணங்கள் மூலம் 5,300 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 38 சார்-பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதில், உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட 6,892 ஏக்கர் நிலமும் அடங்கும்.
இது தொடர்பான விசாரணையின்போது, இந்த முறைகேட்டில் பதிவுத் துறையைச் 63 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதில், முதற்கட்டமாக 9 முக்கிய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மீதமுள்ள 54 அதிகாரிகள் மீது 17-பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.