சென்னை: தமிழ் பரப்புரை கழகம் உருவாக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (2021)   செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை  மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய,  தமிழ் வளர்ச்சித்துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு , “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.” என்று தெரிவித்தார்.

அதன்படி, அயல்நாடு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்படி, அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், “உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனால்,கற்பதற்கான வசதிகள் இல்லாமை, தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் இல்லாமை என இருக்கும் சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,  தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துதல்,  இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருதல், தமிழை அயல்நாட்டு மற்றும் வெளி மாநிலங் களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்,ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்,பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  அகரம் முதல் சிகரம் வரை எனப் பல படிநிலைகளாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டுச் சான்றிதழ் தேர்வும் நடத்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.