டில்லி
ஆதார் எண்ணை மொபைலுடன் இணைப்பதால் தனிப்பட்ட விவரங்கள் வெளிவரும் என எதிர்ப்பு கிளம்பியதால் அதற்கு மாற்று வழிகளை அரசு ஆலோசித்து வருகிறது.
உச்சநீதிமன்றம் மொபைல் இணைப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முன்பு தொலைத்தொடர்புத்துறையை அறிவுறுத்தியது. அதையொட்டி மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவை தொலை தொடர்புத்துறை பிறப்பித்தது. வரும் மார்ச் மாதத்துக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத மொபைல் என்அல் துண்டிக்கப்படும் என ஆறிவித்திருந்தது. ஆனால் பலரும் இதை ஆதரிக்கவில்லை. ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தனிநபரின் அனைத்து விவரங்களும் வெளியாகும் அபாயம் உள்ளதாகவும் இது உச்சநீதிமன்றம் தெரிவித்த தனி மனித உரிமைக்கு எதிரானது என கருத்துக்கள் வெளி வந்தன. ஒரே நேரத்தில் பலரும் மொபைல் நிறுவனத்தில் ஆதார் எண்ணை இணைப்பதால் நெரிசல் அதிகமானதால் பலரால் இணைக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து அரசு அனைத்து மொபைல் நிறுவனங்களும் வீடு வீடாக வந்து ஆதார் எண்ணை இணைக்கும் எனவும், ஆதார் எண்ணை இணைக்கும் போது பெயர், புகைப்படம் தவிர வேறெந்த விவரமும் மொபைல் கம்பெனிகளுக்கு தெரிய வராது என உறுதி அளித்தது. ஏற்கனவே 50 கோடி பேர் ஆதார் எண்ணை மொபைலுடன் இணைத்துள்ளதையும் அரசு சுட்டிக் காட்டியது.
ஆயினும் எதிர்ப்பு வலுக்கவே, அரசு வேறு முறைகளை ஆலோசித்து வருகிறது. ஆதாருக்கு பதில் ரேஷன் கார்ட் ஓட்டுனர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் இணைப்பு சாத்தியமா என்னும் நோக்கில் ஆய்வு நடைபெறுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர், “நாங்கள் தற்போது ரேஷன் கார்ட், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவைகளை இணைப்பது குறித்து ஆராயந்து வருகிறோம். இதன் மூலம் ஒரு நபரின் அடையாளம் எவ்வளவு சரியாக அமையும் என்பதைப் பொறுத்து இவைகளை பயன்படுத்துவது பற்றி முடிவெடுக்கப்படும்” எனக் கூறி உள்ளார்.