சென்னை:
கொரோனா ஊரங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி, இதுவரை மூன்று முறை தொலைக்காட்சியில் பேசி இருக்கிறார். ஆனால், நோய்க்கான மருந்து, மக்களுக்கான நிவாரணம் பற்றி அறிவிக்க வில்லை.
இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். முழு அடைப்பால் அவர்கள் உணவின்றி, வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான உணவுக்கு அரசு உத்தரவாதம் தர வேண்டும்.
ஆனால், அதை செய்ய அரசு முன்வரவில்லை. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதை வன்மையாக கண்டிக்கிறது.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் அரசு செலுத்தினால் எந்த பிரச்னையும் இல்லாமல் ஊரடங்கு வெற்றி பெறும்.
தமிழ்நாட்டிலும் மாநில அரசாங்கம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், பாதி இடத்திற்கு மட்டும்தான் அந்தப் பணம் போய் சேர்ந்துள்ளது.
விவசாயிகளும் அவர்களுடைய கொள்முதல்களை எடுத்துச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, விவசாயிகள் விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்ல அரசு உதவி செய்ய வேண்டும். உழைப்பை நம்பி இருக்கின்ற மக்களுக்கு மருத்துவமும், நிவாரணமும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்/
தமிழ்நாடு அரசு கொடுக்கக் கூடிய ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதுதான் சரியானது”.
இவ்வாறு அவர் கூறினார்.