சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்  கோரிக்கைகளை  நிறைவேற்ற முடியாதது. அரசால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளுடன் போராட வேண்டாம்  என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு பணிகள் முடங்கி உள்ளது.

இந்த நிலையில்,  அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஓய்வூதியச் செலவு சுமை ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரித்து வந்த நிலையில், வளர்ச்சிப் பணிகளையும், மக்கள் நலப் பணிகளையும் செயல்படுத்திட நிதியே இல்லாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் 174 நாடுகளும், இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர, மத்திய அரசும், பிற மாநிலங்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் உயர்ந்துவரும் ஓய்வூதிய நிதிச் சுமையால் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்க இயலாத நிலை ஏற்படுவதுடன், அரசு ஊழியர் சம்பளம் உள்ளிட்ட நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் திவாலாகிவிடும் நிலை ஏற்படும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்த நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய அமைக்கப்பட்ட குழு, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மக்கள் நலத் திட்டங்களும், வளர்ச்சிப் பணிகளும் செயல்படுத்த நிதி இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அறிக்கை பெற்ற உடனே அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் ஆண்டில் 21,594 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது என்றும், இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 24,000 கோடி ரூபாயாக உயரும்.

இதை அரசு வெளிச்சந்தையில் கடன் பெற்று செலவு செய்யும் நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால் அதற்காக 20,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது என்றும், இதையும் அரசு கடன் பெற்றுத்தான் வழங்க முடியும்.

இதனால்தான் முந்தைய ஊதியக்குழு கடைபிடித்த வழிமுறையையே பின்பற்றி சம்பள உயர்வு கருத்தியலாக 1.1.2016 முதலும், பணப்பயன் 1.10.2017 முதலும் வழங்கப்பட்டது.

மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும், மாநில அரசில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் இதே கல்வித் தகுதியில் பிற அரசுப் பணிகளிலும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது.

எனினும், இதே கல்வித் தகுதியுள்ள பிற பணியாளர்களை விட இடைநிலைஆசிரியர்களுக்கு கூடுதலாக மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே நிறைவேற்ற முடியாத இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.