சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களது ஈட்டிய விடுப்பை பணமாக பெறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அளிக்கப்படுகிறது. ஈட்டிய விடுப்பு எடுக்காதவர்களுக்கு அந்த ஆண்டு முடிவில் 15 நாட்களுக்கான முழு ஊதியம் பிடித்தம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி அதிக அளவில் தேவைப்பட்டதால், கடந்த ஆண்டு, ஈட்டிய விடுப்புக்கான பணம் வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  இதுதொடர்பாக 2020ம் ஆண்டு ஏப்ரல் 27ந்தேதி அரசாணை வெளியிட்டது. மேலும் டிஏ உயர்வு போன்ற சம்பள உயர்வு நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகஅரசு தற்போது புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக  பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை முதன்மைச் செயலாளா் ஹா்சகாய் மீனா வெளியிட்டுள்ளாா். அதன்படி, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இதற்கான கேட்பு ரசீதுகள் எந்தத் தேதியில் எந்த நிலையில் இருந்தாலும், அதனை பரிசீலிக்க வேண்டாமென உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஈட்டிய சரண் விடுப்பு தொடா்பாக ஒப்புதல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்து விட்டு, அந்த விடுப்புகளை அரசு ஊழியரின் விடுப்புக் கணக்கில் சோ்க்கலாம் என்று தனது உத்தரவில் ஹா்சகாய் மீனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துள்ள தமிழகஅரசு, தற்போது, அவர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்கவும்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.