சென்னை: கலப்பு திருமண தம்பதிகளின் சாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக  கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட ஆணையை,  தற்போது, தமிழக அரசு மீண்டும் அரசாணையாக வெளியிட்டு உள்ளது.
தமிழகஅரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையில், கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என அனைத்து வருவாய் துறை அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளது.
எடப்பாடி அரசின் இந்த உத்தரவு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கலப்பு மண தம்பதிகளின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ் தொடர்பான புரட்சிகர திட்டம்,  கடந்த 1975ம் ஆண்டு  கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த எம்ஜிஆர் உள்பட அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் காட்டினர். இது தொடர்பாக பலர் நீதிமன்ற கதவுகளை தட்டிய நிலையில், நீதிமன்றமும் தமிழகஅரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.
தற்போதைய தமிழக தேர்தல் களத்தை கருத்தில் கொண்டு, தமிழகஅரசு தற்போது புதிய அரசாணையை வெளியிட்டு உள்ளது.  தமிழக அரசின் நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திமுகவைச் சேர்ந்தநிர்வாகி தமிழன் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில்,   இந்த புரட்சிகர திட்டத்தினை ‌27.06.1975 அன்று கொண்டு வந்தது”திமுக”வும்” தலைவர் கலைஞரும் தான்… இத்திட்டத்தை சரியாக அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என்று உயர்நீதிமன்ற வழக்கின் விளைவு தான் இப்போது அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

கலப்பு திருமணம் என்பது யாது?

அரசு விதிகளின்படி, தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர், அருந்ததியர் அல்லது பழங்குடியினராக இருந்தால் மட்டுமே அது கலப்புத் திருமணம். பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட ஒரே பட்டியலுக்குள் வரும் சாதியினர் திருமணம் செய்துகொண்டால் அது கலப்புத் திருமணம் ஆகாது. மதம் மாறி திருமணம் செய்பவர்களுக்கும் இது பொருந்தும்.

கலப்புத் திருணம் செய்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை உண்டு. இதற்கு தம்பதியரின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருவருடைய குடும்ப அட்டை நகல், சாதிச் சான்றிதழ் நகல், திருமண பதிவுச் சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் இரு நகல்கள் தேவை. வட்டாட்சியர் அளவில் கலப்புத் திருமணச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலை இணைத்து மனு எழுதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் நீங்கலாக, அனைத்து சான்று நகல்களிலும் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.