“ஜல்லிக்கட்டு குறித்து எழுந்திருக்கும் பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு, போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

“பிரதமரின்  பதில் இப்படித்தான் இருக்கும் , எதிர்பார்த்த ஒன்றுதான். வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இப்படித்தான் சொல்லுவார். ஆகவே  ஓரிரு நாள் போராட்டத்தில் மத்திய அரசை பணிய வைக்க வேண்டும் என்பதை  சரியான அரசியல் போராட்டமாக நான் கருதவில்லை.

ஆனால் இன்று போராட்டம் ஒரு தொண்டு நிறுவனத்தை குறிவைத்து மட்டுமே நடத்தப்படுகிறது.  ஆனால் மத்திய மாநில அரசுகளை நோக்கிய  போராட்டம்தான் தேவை.

தமிழக அரசு பல்வேறு காரணங்களுக்காக  இந்த போராட்டத்தை உள்நோக்கத்தோடு  ஊக்கப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. அப்படி,  ஊக்கப்படுத்துவது தவறு.

தமிழக அரசே அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை  நடத்தி இருக்கலாம். ஏன் செய்யவில்லை. திமுக அரசு அதைத்தானே செய்தது. எங்களால், முடியாது நீங்கள் அவசர சட்டம் கொண்டு வந்து நடத்துங்கள் என்று மத்திய அரசு சொல்லியிருக்கும் போது அதை ஏன் தமிழக அரசு செய்யவில்ல?

அதன் பிறகு வழக்கு வந்தால் எதிர்கொள்வதில் ஒன்றும் பிரச்சனை இல்லையே. ஆந்திராவில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை நடத்துகிறார். அதை ஏன் முதல்வர் ஓபிஎஸ் செய்ய முடியவில்லை.

மாணவர்கள் தன்னியல்பாக ஜல்லிக்கட்டுக்கு போராட முன் வந்தார்கள் , அதை மாநில அரசு தனக்கு சாதகமாக மாற்றி போராட அனுமதித்து பிரச்சனையை தமிழக அரசு திட்டமிட்டு திசை திருப்பி விட்டுள்ளது.

ஐம்பது பேராக போராடிய மாணவர்களை அழைத்து பேசி முடித்து வைக்காமல் பெரிதாக வளரவிட்டு குளிர்காய்கிறது மாநில அரசு.  இதில் தமிழக அரசின் பல்வேறு பிரச்சனைகள் , அவர்கள் உட்கட்சி பிரச்சனைகள் மறைக்கப்பட்டுவிட்டது” இவ்வாறுய் திருமாவளவன் தெரிவித்தார்.