ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’! காங்-திமுக ஆதரவு

Must read

புதுச்சேரி,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’ நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது  ஆதரவை தெரிவித்து உள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த இளைஞர்கள்  தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.

இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இரவு-பகலாக மாணவர்கள் போராட்ட களத்தை விட்டு விலகாமல் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பி வருகின்றனர்.

புதுவையிலும் மாணவர்கள் ரோடியர் மில் திடலில் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று  3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் புதுவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த பல்வேறு குழுக்கள் கொண்ட போராட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

போராளிகள் குழு என்ற பெயரிலான இந்த அமைப்பு,  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

நாளை  (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

புதுவை காங்கிரஸ் ஆதரவு

இதுகுறித்து,  புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வராமல் தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் புதுவை போராளிகள் இயக்கம் சார்பில் 35-க்கும் மேற்பட்ட சமூக இயக்கங்கள் பங்கேற்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.

புதுவை திமுக ஆதரவு

இதேபோல், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர்களின் உணர்வை, ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற வகையில் நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வாழ்த்துவதுடன், இந்த போராட்டத்துக்கு புதுவை மாநில தி.மு.க. துணை நிற்கும். அதே வேளையில் நீதி கிடைக்கும் வரை மாணவர்கள் நடத்தும் அனைத்து அறவழி போராட்டத்துக்கும் தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

புதுவை இந்திய கம்யூனிஸ்டு  ஆதரவு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் உணர்வு கொண்ட மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டம் முழு ஆதரவு பெற்றுள்ளது. போராளி இயக்கமும் மற்றும் போராட்ட குழு, இதர அமைப்புகள் நடத்தும் முழு அடைப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. பொதுமக்கள் மற்றும் அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டுகிறோம் என்று கூறி உள்ளார்.

இதேபோல், புதுவை மாநில வணிகர் கூட்டமைப்பு, வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article