சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து நாடு முழுவதும  கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், பணியின்றி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்க ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது.  “நாள் முழுவதும் சாலையில் நின்று கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு விடுமுறை கிடையாது. ஆனால், ஓராண்டாக  பள்ளிக்குச் செல்லாமலே வீட்டிலிருக்கும் ஆசிரியர்களுக்கும்,. சம்பளம் மட்டுமில்லாமல், மற்ற அனைத்துச் சலுகைகளும் அவர்களுக்குத் தவறாமல் கிடைக்கிறது. இது என்ன அநியாயம்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவுற்ற  நிலையில்,தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,”திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பணிகள் விரைவில் முடிவடைந்து முழு பயன்பாட்டிற்கு வர இருக்கிறது என்றார்.

மேலும்,  ”கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இருப்பினும் மாணவர்கள் படிப்பறிவு விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக அலகு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்றார்.

அப்போது, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக வேலையின்றி உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறைக்கப்படுமா என்று செய்தியளார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர்,   ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.