சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை  கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.

கடலூர் விபத்தில், 9 பேர் உயிரிழப்புக்கு  தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று (டிசம்பர் 24ந்தேதி)  மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்கம் வலது புறம் இருந்த டயர் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறிய பஸ் மறுமார்க்கத்தில் சென்னை-திருச்சி சாலையில் பாய்ந்தது.

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற 2 கார்கள் மீது மோதி சாலையோர பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்து நின்றது. இதனால், பஸ்சில் பயணித்த பயணிகள் கூச்சலிட்டனர். அவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.

பஸ் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் சிக்கி இருந்தவர்கள் காப்பாற்றுமாறு குரல் எழுப்பினார்கள். இதை பார்த்தவர்கள் ஓடோடி வந்து மீட்க முயன்றனர் ஆனால் கார்களுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் , மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒரு குழந்தையும், முதியவரும் உயிரிழந்தனர்.

இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேர் கவலைகிடமான நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்துக்கு காரணம் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற அரசு பேருந்து – கார் மோதி ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். ஒரே நொடியில் தங்களின் அன்பு உறவுகளை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.

இத்தகைய கொடூரமான விபத்துகள் மீண்டும் நிகழாத வகையில், அரசு பேருந்துகளின் பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

அதுபோல பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில்,  கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 மகிழுந்துகள் மீது மோதியதில் மகிழுந்துகளில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

யாருக்கும் வெட்கமில்லை…..! மூத்த பத்திரிகையாளரின் குமுறல்…

[youtube-feed feed=1]