சென்னை: அரசு பேருந்து ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுவதாக,  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது.

தேர்தலையொட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக பணியாற்றி வருகின்றனர்.  ஆனால்,  அரசு போக்குவரத்து ஊழியர்கள் கட்சி சார்ந்த தேர்தல் பணிகளில் ஈடுபட கூடாது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்கள்  தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் வருவதால் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை தவிர கட்சிகளுக்கு எந்த விதமான உதவிகளும் செய்யக்கூடாது என்றும்,  தேர்தல் பணியில் இல்லாத அரசு ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரம், வாக்குச்சாவடி அருகே கட்சி சார்பான விளக்கமளித்தல் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.