தமிழகம் வந்துள்ள சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்புக்காக, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஓடி ஓடி உழைத்த நிகழ்வு தெரிய வந்துள்ளது.
குடி மக்களின் புகார்கள் மீதோ, மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளிலோ கவனம் செலுத்தாக தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் இருநாட்டு தலைவர்கள் வருவதையொட்டி பம்பரமாக சுழன்று பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து சுத்தம் செய்து, நிவாரண பணிகளையும் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்ட விவரம் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சுபஸ்ரீ வழக்கில் கருத்து உயர்நீதி மன்ற நீதிபதிகள், சென்னைக்கு வெளிநாட்டு அதிபர்கள் வந்தால்தான் சுத்தமாக வைக்கப்படும்போல என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசின் சுற்றறிக்கை அதை மெய்ப்பித்துள்ளது.
மோடியும் சீன ஜனாதிபதியும் நகரத்தில் இருக்கும்போதுதான் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் பிரச்சினை களை சரிசெய்ய முடியும் என்று எண்ணுகிறது போல….
குடிமக்களாகிய நாம் நமது உள்ளூர் பகுதிகளில் கூட பிரச்சினைகளைப் பற்றி புகார் கூறும்போது அது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத அரசும், அரசு அதிகாரிகளும், இரு நாட்டு அதிபர்களின் சந்திப்புக்காக மட்டும் இரவு பகல் பாராது ஓடிஓடி உழைப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, மக்களுக்காக கவலைப்படாத நிலையில், மற்றொரு நாட்டின் அதிபரின் வரவுக்காக இவ்வளவு மெனக்கெட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசின் மிரட்டலுக்கு பயந்து இங்குள்ள அடிமை அரசும் அதிகாரிகளும் விழித்துக்கொண்டு பணியாற்றினார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
அரசும், அதிகாரிகளும் இப்போது செயல்படுவதுபோல எப்போதும் மக்கள் பணியில் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா….