சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவ பணியை தொடங்க தமிழகஅரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவர்கள் தேவைப்படுவதால், அவர்கள் பணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்கள், இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான்,  நமது நாட்டில் மருத்துவராக பணியாற்ற முடியும். அதன்படி, கடந்த ஆண்டு (2020) வெளிநாடுகளில் படிப்பை முடிந்த மருத்துவர்கள்  21,000  பேர் தகுதித்தேர்வை எழுதினார். இதில், 2,722 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 200 பேர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள்.

ஆனால், கொரோனா தொற்று காலம் என்பதால், மருத்துவர்கள் தேவை அதிகரித்துள்ளதால், தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் என அனைவரையும், பல மாநில அரசுகள், பயிற்சி மருத்துவர்களாக பணியில் சேர்த்துக்கொண்டுள்ளனர். அதுபோல தமிழகத்திலும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இநத் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை காரணமாக, அதற்கான 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 பேரும் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.