காங்கோ நாட்டின் விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் தன்னை 14 ஆண்டுகளாக காத்து வந்த வனக்காவலரின் மடியில் உயிரை விட்ட கொரில்லா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக மலைகளில் வேட்டையாடும் நபர்களால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல், தாயின் சடலத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு மாத கொரில்லா குட்டியை மீட்டு ‘டகாசி’ என்று பெயரிட்டு விருங்கா தேசிய உயிரியல் பூங்காவில் வளர்த்துவந்தனர்.

உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட குரங்குகளை மீண்டும் வனத்திற்குள் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் தனியாக விடப்பட்ட மலை கொரில்லாக்களை மீட்டு பாதுகாக்கும் மையமாக இந்த பூங்கா விளங்குகிறது.

கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த ‘டகாசி’ தன்னை வளர்த்த ஆண்ட்ரே என்ற வனக்காவலரின் மடியில் கடந்த வாரம் உயிரிழந்தது, இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஏற்கனவே இந்த கொரில்லா குரங்கு வனக்காவலர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.