சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி குறித்து, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாநில, மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், குறைந்த வட்டியில் தங்க நகை அடமான கடன்களை வழங்குகின்றன. சட்டப்பேரவை தேர்தலின்போது ‘கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், என தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 2018 -19, 2019 -20, 2020 -2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு, கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், நகை கடன் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆதார் எண் மற்றும் நகை கடன் வைத்தபோது வழங்கிய அசல் ஆவணங்களை, எடுத்து வருமாறு கூறி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.