அமராவதி:
தென்மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி நதியுடன், காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆந்திர மாநிலத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தனர். பின்னர் பாஜக நிர்வாகிகளி டையேபேசிய கட்கரி, தண்ணீர் பிரச்சினைகளை தீர்ப்பு நதிகள் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், கோதாவரி நதியின் நீர் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மறுபக்கம் கர்நாடகம், தமிழகம் இடையே நதிநீர்ப் பங்கீடுப் பிரச்சினை இருக்கிறது. இரண்டையும் சீர் செய்யும் வகையில் கோதாவரி, காவிரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர் பிரச்சினை தீரும் என்றார்.
தமிழகம் கர்நாடகம் இடையே 45 டி.எம்.சி. தண்ணீருக்காக பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், கோதாவரி நதியுடன் காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்தால், தண்ணீர் பிரச்சினை தீரும் என்றும், இதற்கான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த திட்ட அறிக்கை விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படும் என்றவர், இந்த திட்டத்தின்படி, நதிகளின் நீர்களை இணைக்க கால்வாய் வெட்டப் படாமல் இரும்பு குழாய்கள் மூலமே தண்ணீர் செல்ல முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 4 தென்மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நீர் ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் முன்னிலையில் உள்ளது என்றார் கத்கரி. தனது பேச்சின்போது பாஜகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகள் சில இப்போது பாஜக ஆட்சியை விமர்சித்து வருவது கவலை அளிப்பதாக கத்கரி தெரிவித்தார்.