அமராவதி:

தவறான பாதையில் சென்றதால் சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்து விட்டார் என ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.


ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில், 151 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 சட்டப் பேரவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனையொட்டி, ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் பதவியேற்கவிருக்கிறார்.

இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு எங்கள் கட்சியின் 23 எம்எல்ஏக்களை தெலுங்கு தேசக் கட்சி விலைக்கு வாங்கியது.

இப்போது அதற்கு தண்டனையாக தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், எங்கள் கட்சியின் 3 எம்பிக்களையும் சட்டவிரோதமாக வளைத்துப் போட்டார். இப்போது தெலுங்கு தேச கட்சி 3 எம்பி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடவுள் அழகான கதையை எழுதியுள்ளார் பாருங்கள்.
தவறான பாதைக்கு சென்ற சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார்.

நாங்கள் எதிர்வரும் 5 ஆண்டுகள் மக்களுக்கு செய்யும் சேவை, எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வழிவகுக்கும்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, மத்திய அரசை எங்கள் எம்பிக்கள் வலியுறுத்துவார்கள் என்றார்.