மத நம்பிக்கை.. மக்களும் டுபாக்கூர்களும்.. – ஏழுமலை வெங்கடேசன்
உலகின் ஒவ்வொரு மதமும் கட்டாயம் பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியே இருக்கும். சில விஷயங்கள் மிகவும் மதி நுட்பம் வாய்ந்தவையாக இருக்கும்.. சில விஷயங்கள் அப்பட்டமான மூடநம்பிக்கை, இந்த காலத்துக்கு பொருந்தாதவை என காட்டமான விமர்சனங்களை கொண்டிருக்கும்.
இருப்பதில் தலையாய நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு பின்பற்றி நடப்பதே உலகம் முழுக்க நடந்து வருவது..
இந்துக்களை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு 95 சதவீதம் பேருக்கு மிகவும் ஆழமான மத விஷயங்கள் முழுமையாக தெரியவே தெரியாது..மதபோதனைகளை படிக்க ஆர்வம் காட்டுவார்களா என்றால் அதுவும் கிடையாது.
ஆனால், ” பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும். தப்பு பண்ணா தெய்வம் நின்னு கொல்லும், மத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிகிட்டா நம்ம புள்ளைங்க தலையில்தான் பாவம் வந்து விடியும்.. எல்லாத்தையும் கடவுள் பாத்துகிட்டுத்தான் இருக்காரு.”
இப்படி அடிப்படையில் அறம் சார்ந்த விஷயங்களைத்தான் மதக்கோட்பாட்டில் வைத்து பெரும்பாலானோர் பின்பற்றுவார்கள்.. விருப்பம் வரும்போது கோவிலுக்கு போய் சாமிகும்பிட்டுவிட்டு வந்து அவரவர் வேலையில் மூழ்கிப்போய்விடுவார்கள்
சாஸ்திர சம்பிரதாயம் என்று பார்க்கப்போனால், வாரநாட்களில் வெள்ளி, சனி, மாதத்தில் கிருத்திகை போன்ற தினங்களில் பூஜை, வழிபாடு, முன்னோர்களை நினைத்து அமாவாசை, திவிசம் என தவறாமல் படைப்பார்கள். அவ்வளவுதான்..
இவர்களுக்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், மனுதர்மம் போன்றவையெல்லாம் அவசியம் போட்டு புரட்டவேண்டிய சமாச்சாரங்கள் என்று கனவிலும் நினைப்பதில்லை. கேள்விப்படுவதோடு சரி. நேரடியாக சொன்னால் கடவுளை கும்பிடும் விஷயத்தில் இடைத்தரகர்களை விரும்பவேமாட்டார்கள்
ஆனா ”நாங்கதான் மதத்துக்கே ஓனர்ஸ், காப்பாத்தவேண்டிய டூட்டி எங்களுக்குத்தான் உண்டு” என்று சொல்லிக்கொண்டு போதிப்பதாக திரியும் சில கபோதிகள்தான், எல்லா ஏமாற்று வேலைகளையும் செய்வார்கள்..
பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடுவது, புத்திகெட்ட செல்வந்தர்களின் சொத்துக்களை வளைப்பது, எல்லாவற்றிலும் வணிகமயம், அரசியல்வாதிகளின் நெருங்கிய நட்பு, அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது என ஜெகஜோதியாய் கலக்குவார்கள்..
சொல்லப்போனால் இந்த டுபாக்கூர்கள்தான் நூறு சதவீத உண்மையான இறைமறுப்பாளர்கள். நாம் அயோக்கியத்தனம் செய்தால் உடனே கடவுள் தண்டிப்பார் என்ற பயமெல்லாம் இவர்களுக்கு கிடையாது.. காரணம், கடவுள் என்ற ஒன்று இல்லவேயில்லை என்பதுதான் இவர்களின் அசைக்கமுடியாது நம்பிக்கை. அதனால்தான் மதத்தின் பெயரால் அவ்வளவு ஆட்டம்..
நான் குறிப்பாக யாரையும் சொல்லவில்லை.. அத்தனை டுபாக்கர்களையும் சொல்கிறேன்.