சென்னை:
இன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக ‘#GobackModi’ (மோடி திரும்பிப்போ) மீண்டும் டிரண்டிங்காகி உள்ளது.
இந்த நிலையில் , திரும்பிப்போ மோடி (‘#GobackModi) என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இன்று மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக அரசியில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்பட எதிர்க் கட்சிகள் மற்றும் 160 அமைப்புகள் பங்குகொண்ட கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்து இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இன்று சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான திரும்பிப்போ மோடி என்பது தமிழகத்தின் குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் குரல். எதுவுமே செய்யாத மோடி பதவியை விட்டு போகவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதன் வெளிபாடுதான் இந்த பதிவுகள் என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் புயல் பாதித்த நேரத்திலும் சரி, தூத்துக்குடிச் சம்பவத்திலும் சரி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாத பிரதமர் மோடி, தமிழகத்தை திரும்பி பார்க்காதவர். எனவே மக்கள் அவரை திரும்பிப்போ என்று சொல்கிறார்கள்… என்று கூறினார்.
பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்படும் என்றும் கூறினார்.