னாஜி

பா ஜ க ஆட்சி செலுத்தும் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கோவாவின் கடற்கரையில் மது அருந்த தடை உள்ளதாகவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் சுற்றுலா தான் முக்கிய தொழில் என்பது அனைவரும் அறிந்ததே.  கோவாவில் கடற்கரையில் அமர்ந்தபடி சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவதும், நடனம் ஆடுவதும் எப்போதும் நிகழும் எனபதும் தெரிந்ததே.  தற்போது பொறுப்பேற்றுள்ள பா ஜ க அரசு இதற்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்காவ்கர் தெரிவித்ததாவது :

”கடற்கரைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதும், அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதும் அரசின் முக்கிய கடமை.  அதனால் தான் இந்த அரசு கடற்கரையில் மது அருந்துவதை முழுவதுமாக தடை செய்துள்ளது.  இதை மீறுவோர் தேவைப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

இது குறித்து பொதுமக்கள் பலர் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.  அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மேலும் போதை மருந்துகளை சுற்றுலாப்பயணிகளுக்கு விற்பதும் ஆங்காங்கே நடைபெறுகிறது.  சுற்றுலாத்துறை காவலர்கள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.  சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது“ என கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் கடற்கரையில் உள்ள உயிர் காக்கும் சேவைகளை தனியாரிடம் அளித்தது மாற்றப்படமாட்டாது என தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் திருஷ்டி உயிர்காக்கும் சேவை நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 3033 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் 677 பாதுகாவலர்களில் 85%க்கும் மேல் கோவாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

கோவா அரசால் இந்தப் பணியை செய்ய முடியாததால் தான் இந்தப் பணி தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அருமையாக சேவை புரிந்து வருவதாகவும்,  இந்த சேவை கோவாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அவசியம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்த்துள்ளார்.