இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து மீட்பு கருவிகளை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் சிக்கியுள்ளான். அவனை மீட்பதற்கான பணிகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வருகை தந்த தமாகா தலைவர் ஜி.கே வாசன், சிறுவனின் நிலை, மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு, சிறுவனின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “3 இரவு, சுமார் 62 மணி நேரம், கடுமையான மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. இடையில் பல சோதனைகள், இயந்திர கோளாறு, கடுமையான பாறைகள் போன்றவை குழி தோண்ட சவாலாக அமைந்துள்ளது. மீட்பு பணியில் உள்ள பணியாளர்கள், ஊழியர்கள் தோய்வில்லாமல் பணி செய்கிறார்கள். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நிகழ்வு இடத்திலேயே இரவு பகலாக தங்கி மீட்பு பணிக்கு உருதுணையாக இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றுபவர்களும் இங்கு இருக்கிறார்கள். நல்ல பலனை இது பெற்று, வெற்றி பெற வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பு.

உண்மை நிலை என்னவெனில், இதுபோன்ற விபத்துக்களை முழுமையாக சமாளிக்க கூடிய கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய தேவை அனைத்து மாநில அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணிபுரிவோர் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். இதுபோன்ற விபத்துக்களுக்கு புதிய தொழில்நுட்ப மேம்பாடு அவசியம். எனவே மத்திய, மாநில அரசுகள் இதை கவனித்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற தருணத்தில் சுஜித்தின் பெற்றோர் மனநிலை எல்லோருக்கும் தெரியும். இறைவன் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும். சுர்ஜித் நலமுடன் திரும்ப இறைவன் துணை நிற்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்தாலும், இதுபோன்ற உச்சபட்ச தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி அரசு மீட்டாலும் கூட, சோதனைகள் தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு புதிய இயந்திரம் வந்தும் சோதனை தொடர்கிறது. மணப்பாறையில் உள்ள பாறைகள் கடினமான பாறைகள். எந்த இயந்திரத்தை கொண்டுவந்தாலும், அதில் உள்ள பல் உடைந்து, சேதமடைந்துவிடுகின்றன. இதை தமிழகமே ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலமாக பார்க்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அரசு வீரர்கள், அதிகாரிகள் எதிர்நீச்சல் போடுகிறார்கள். இயற்கையை எதிர்த்து இதற்கு மேல் பணிகளை தொடர முடியுமா என்று கேட்டால், முடியாது என்பது தான் என்னுடைய பதில். இயற்கையை எதிர்த்து போராடுகிறார்கள். நல்ல முறையில் மீட்பு பணி வெற்றிபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.