பெங்களூரு

பெங்களூரு நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 60 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் அதிக வேலை வாய்ப்பு காரணமாக நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் வந்து தங்கிப் பணி புரிந்து வருகின்றனர்.  குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இங்குத் தங்கி வருகின்றனர்.   இவர்களில் ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என மத்திய குற்றவியல் பிரிவுக்குப் புகார் வந்தது.

இவ்வாறு தங்கி உள்ளவர்கள் ஏதேனும் குற்றவியல் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என்னும் எண்ணத்தில் தீவிர வேட்டை நடந்துள்ளது.  மாராத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கேபிபுரம், எச் ஏ எல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் 60 வங்க தேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சட்டவிரோதமாக ஆதார் அட்டை உள்ளிட்ட பாலர் அரசு சலுகைகளைப் பெற்றுள்ளனர். இந்த 60 பேரில் 29 பேர் ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 9 சிறுமியர் உள்ளனர்.   இவர்களைக் கைது செய்த காவல்துறையினர் இவர்கள் இந்நாட்டு எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் என விசாரணை செய்து வருகின்றனர்.  இவர்களில் பலர் தினக்கூலிகளாக உள்ளனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் வங்கதேசத்துக்குத் திரும்ப  அனுப்ப பட உள்ளனர்.

இது குறித்து நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ், “வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடும் முன்பு வாடகைதாரரின் ஆவணங்களை முழுமையாக  பரிசோதிக்க வேண்டும்.  அத்துடன் அவர்களைக் குறித்த விவரங்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.  அவ்வாறு இல்லை எனில் வாடகைதாரர் சட்டவிரோத குற்றங்களில் ஈடுபடும் போது வீட்டு உரிமையாளர்கள் தேவையற்ற துயரை அனுபவிக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.