மும்பை: ரூ.20 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நீங்கள் எங்களுக்கு 20 கோடி ரூபாய் தரவில்லை என்றால், நாங்கள் உங்களை கொன்று விடுவோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று அந்த மின்னஞ்சலில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பொறுப்பாளர் மும்பையில் உள்ள காம்தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  மும்பை காம்தேவி போலீசார், அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில், தெற்கு மும்பையில் உள்ள திரு அம்பானியின் வீட்டிற்கு அருகில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட SUV கண்டு பிடிக்கப்பட்டது. எஸ்யூவி வைத்திருந்த தொழிலதிபர் ஹிரன், கடந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அண்டை நாடான தானேயில் உள்ள ஓடையில் இறந்து கிடந்தார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து 2022ம் ஆண்டு  பீகாரை சேர்ந்த ராகேஷ் குமார் மிஸ்ரா என்பவர் மிரட்டல் விடுத்த நிலையில், கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது,  அடையாளம் தெரியாத நபர் மூலம் பணம் கேட்டு முகேஷ் அம்பானி நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.