மதுரை: நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு சுதந்திரம் கொடுங்கள் என மோடி அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்குவது குறித்து சிந்தியுங்கள் என மத்தியஅரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ரூ.300 கோடி நிதி மோசடி  தொடர்பான வழக்கை, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்க கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள்,  சிபிஐ-க்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்றும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், அமெரிக்காவின் எப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்த்து யார்டு போலீசை போல நவீன வசதிகள் சிபிஐ-க்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,  2020-ம் ஆண்டு டிச.31-ம் ஆண்டு வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, இதுதொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது, கடந்த 2013ம் ஆண்டு நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு, மத்திய அரசை கடுமையாக கண்டித்த  உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக குற்றம் சாட்டியது.  இதையடுத்து,  சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக, அமைச்சரவை குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். ஆனால், அது கிடப்பில் போடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.