சென்னை

கூவம் ஆற்றங்கரையில் அகற்றப்பட்ட குடிசை பகுதியில் வசித்த மாணவி கீர்த்தனா 12 ஆம் வகுப்புத் தேர்வில் 492 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள குடிசையில் வசித்து வந்த நாகமுத்து  என்பவர் ஒரு சிறு நிறுவனத்தில் கணக்குகளைக் கவனித்து வந்தார்.  அவருடைய மனைவி ஒரு சிறு தையல் கடையை நடத்தி வந்தார். இருவரும் இணைந்து   மாதத்துக்கு ரூ.40000 ஊதியம் ஈட்டி வந்தனர்.   இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

மூத்தவரான மகன் ஒரு மெக்கானிக் கடையில் பணி புரிந்து வந்தார்.  மகள் கீர்த்தனா 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.    கூவம் ஆற்றங்கரை சீரமைப்பு காரணமாக இவர்கள் வீடு அகற்றப்பட்டது.   பதிலுக்கு இவர்களுக்கு பெரும்பாக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.  இதனால்  நாகமுத்து மற்றும் அவர் மனைவி இருவரும் பணி இழந்தனர்.   வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் அதே பகுதியில் ஒரு சிறு மளிகைக் கடை தொடங்கியதில் மாதம் ரூ.18000 வருமானம் கிடைத்தது.

தாய் தந்தை இருவரும் காலை 5.30 மணிக்குக் கடைக்குச் சென்று இரவு 10  மணிக்குத் திரும்புவதால் தினமும் மாலை சமையல் வேலையை கவனித்து வந்த கீர்த்தனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை முழு நேரமும் சமையலைக் கவனிக்க வேண்டியதாகி விட்டது.  கீர்த்தனா படித்து வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தாலம்பூரில் இருந்தது.  எனவே அவர் தினமும் சுமார் 40 கிமீ தூரம் சென்று வர வேண்டியதானது.   கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த கீர்த்தனா அதைப் பொருட்படுத்தவில்லை.

தனது குடும்பச் சூழலால் தனியார் பயிற்சி வகுப்புக்களுக்குச் செல்லாமல் தானாகவே பாடங்களைப் படித்தார்.  கீர்த்தனாவின் முயற்சி வீண் போகவில்லை.  இந்த வருட 12 ஆம் வகுப்புத் தேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  சமையல், பாத்திரம் கழுவுதல் உள்ளிட்ட வீட்டு வேலைகளையும் செய்துக் கொண்டு தானே படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவி கீர்த்தனாவுக்குப் பாராட்டு மழை குவிந்து வருகிறது.