சென்னை

கொரோனாவுடன் போரிட்டு வரும் சென்னை மக்களைத் தாக்க டெங்கு மற்றும் மலேரியா  நோய்களும் பரவி வருகின்றன.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதில் சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இதுவரை 82000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1338 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் வடசென்னை பகுதிகளில் பாதிப்பு அதிகம் உள்ளது.   இதனால் கடும் பீதி அடைந்துள்ள வட சென்னை மக்களுக்கு கொரோனாவுடன் மற்றொரு அச்சுறுத்தலும் வரத் தொடங்கி உள்ளது.

வடசென்னை பகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் தென் சென்னையின் கோடம்பாக்கம் பகுதியில் கொசுத் தொந்தரவு அதிகரித்து வருகிறது.   இதனால் இங்கு டெங்கு அதிக அளவில் பரவி வருகிறது.  ஒரு சில இடங்களில் மலேரியா காய்ச்சலும் உள்ளது.   இந்த பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்த போது இது தெரிய வந்துள்ளது.

இதில் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால் கொரோனா, டெங்கு, மலேரியா ஆகிய மூன்றுக்கும் ஒரே விதமான அறிகுறிகள் காணப்படுவதாகும்.

இது குறித்து பிரபல தொற்று நோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன், “கொரோனா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட மூன்று நோய்களுக்கும் அறிகுறிகள் ஒன்றாக இருக்கும்.   அது மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த ஒருவருக்கு டெங்கு வந்தால் அவருக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பதாக தெரிய வரும்.

இதனால் டெங்கு வந்தவருக்கு மீண்டும் கொரோனா வந்ததாகத் தவறாக மருத்துவம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.   தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்காக செயல்படுவதால் டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகள் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.  மழைக்காலத்தில் இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதிக கவனம் தேவை” என அறிவித்துள்ளார்.

காவிரி மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் விஜயலட்சுமி, “டெங்கு நோயாளிகளுக்கு கொரோனா நோயாளிகளைப் போல் அதிக மூச்சு திணறல் இருக்காது.  ஆனால் மற்ற அறிகுறிகள் காணப்படும்.  தற்போது நகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகையில் டெங்கு அதிகரித்து வருகிறது.  எனவே மக்கள் கொசுக்கள் சேராமல் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.