ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தேர்தல் அலுவலரிடம் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது. வாக்குக்கு பணம் வழங்குவது தொடர்பாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில், வாக்கு ஒன்றுக்கு ரூ.3000 மற்றும் குக்கர் உள்பட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அதிமுக தரப்பில், குடும்பத்துக்கு ரூ. ரூ.2000 பணப் பட்டுவாடா நடைபெறுவதாகவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஏராளமானோர் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் மற்றும் திமுகவினருக்கு இடையேயான மோதல் குறித்து, தலைமை நீதிபதியிடம் முறையிட நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால், இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரம், வரும் 25-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
அன்று மாலை முதல் வெளியூரில் இருந்து வந்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து, தினமும் ரூ 500 முதல் ரூ 1000 வரை பணம் விநியோகம், சுற்றுலா அழைத்துச் செல்லுதல், முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்து, அதற்கு பணம் வழங்குதல், தோட்டங்களில் வாக்காளர்களுக்கு அசைவ விருந்து வழங்குதல், குக்கர் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்குதல் உள்பட பல விதிமீறல்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோக்களும் வலம் வருகின்றன. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களது புகார் மனுவில், வ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பதை ஏற்கனவே சரிபார்த்து வைத்துள்ள இரு கட்சியினரும், வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்த்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தை வழங்கி வருகின்றனர். சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு, குறிப்பிட்ட இடங்களில் அதனைக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கிற்கு பணம் விநியோகம் நடைபெற்று வருவதாகவும், இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வீடு, வீடாகச் செல்லும் திமுக, அதிமுக நிர்வாகிகள், வாக்கின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் வழங்குவதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக 21ந்தேதி) இரவு மற்றும் 22ந்தேதி மதியம் வரை திமுக மற்றும் அதிமுகவினர் பல இடங்களில் வாக்குக்கு பணம் வழங்கியுள்ளனர். இந்த பணம் விநியோகம் தொடர்ந்து வருகிறது. மேலும், வேட்டி, சேலை, குடம், குக்கர் போன்ற பரிசுப்பொருட்கள் விநியோகமும் பல இடங்களில் நடந்துள்ளது.
இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள், வெளிமாவட்டங்களில் வந்த கட்சி நிர்வாகிகள் ஆனால், அவர்கள் உள்ளூர் நிர்வாகிகள் வழிகாட்ட, வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
மேலும், ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் நேற்று மாபெரும் பிரியாணி விருந்து நடந்தது. திமுக பிரமுகர் வேலு என்பவரது மகள் மகிழினி என்பவரது காதணி விழா என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு பிரியாணி விருந்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என சுட்டிக்காட்டுப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே.ஈசுவரன், ‘ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, ஒரு வாக்கிற்கு, திமுக ரூ 3000-ம், அதிமுக ரூ 2000 வழங்குவதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தகவல் பெறும் உரிமை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மா.வள்ளிநாராயணன் கூறும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகைப்பட ஆதாரங் களுடன், தேர்தல் ஆணையத்திற்கு 4 முறை புகார் அளித்து விட்டேன். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, வீடு, வீடாகச் சென்று இரு கட்சிகளும் வாக்கிற்கு பணம் வழங்கி வருகின்றனர். இதற்கு பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
எனது வீட்டுக்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க ஒரு வாக்கிற்கு ரூ 3000-ம், அதிமுகவினர் அவர்களது வேட்பாளருக்கு வாக்களிக்க ரூ.2000-ம் வழங்குவதாகத் தெரிவித்தனர். இந்த பணத்தைப்பெற்று, நான் உங்களுக்கு அடிமையாக விரும்பவில்லை என திருப்பி அனுப்பி விட்டேன். இதேபோல், இரு கட்சிகளும் பணம் கொடுப்பது குறித்து பலரும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]