வேலூர் ‘முள்ளு’ கத்தரி, ராமநாதபுரம் ‘முண்டு’ மிளகாய் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இதன் மூலம் தமிழ் நாட்டைச் சேர்ந்த 45 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
எலவம்பாடி முள்ளு கத்தரிக்காய் அல்லது வேலூர் தண்டு கத்தரி என்று அழைக்கப்படும் ஊதா, பிங்க் மற்றும் பச்சை நிறம் கலந்த கத்தரிக்காய் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்யப்படுவது தமிழ்நாடு அரசு நில விவர பதிவேட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அரசு வழக்கறிஞர் பி. சஞ்ஜய் காந்தி இதற்கான புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.
ஒவ்வொன்றும் சுமார் 40 கிராம் எடை கொண்ட இந்த முள்ளு கத்தரிக்காயில், 100 கிராம் கத்தரியில் சுமார் 10.5 மில்லி கிராம் அளவுக்கு வைட்டமின் சி-யும் 2% புரதச் சத்தும் அடங்கிய இந்த வகை கத்தரிக்காய் மூன்று நாட்கள் வரை வீட்டில் வைத்திருந்து பயன்படுத்தலாம் அல்லது எட்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
140 முதல் 150 நாட்களில் ஒரு ஹெக்டருக்கு சுமார் 45 டன் மகசூல் கிடைக்கக்கூடிய இந்த கத்தரிச் செடி காயைத் தவிர செடி முழுவதும் முள் நிறைந்து காணப்படும். வறட்சியை தாங்கக்கூடிய இந்தச் செடி நல்ல விளைச்சலை வழங்கக்கூடியது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர் எஸ் மங்கலம், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் விளையக்கூடிய முண்டு மிளகாய் என்று அழைக்கப்பட்டும் ஒருவகை குண்டு மிளகாய்க்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாய் நல்ல சுவை மற்றும் மணம் கொண்டது. செடி ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை காய்ப்பு தரும் இந்த மிளகாய் பெரும்பாலும் இலங்கை, நேபாள், அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்விரண்டு பொருளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் மொத்தம் சுமார் 45 பொருட்களுடன் இந்திய அளவில் தமிழ்நாடு அதிக பொருட்களுக்கான புவிசார் குறியீடு பெற்ற இரண்டாவது மாநிலமாக உள்ளது.
46 பொருட்களுடன் கர்நாடகா முதல் இடத்திலும் 33 பொருட்களுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது.