ஸ்ரீநகர்: இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான், மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர் என முன்னாள் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் மத்திய அமைச்சரும், தற்போதைய ஜனநாயக ஆசாத் கட்சி தலைவருமான மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவரது  பேச்சால் சர்ச்சை  கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களில் முக்கியமானவர்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர்  கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி விகித்தார். பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே சமூகமான போக்கு நிலவவில்லை என கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து  அக்கட்சியில் இருந்துவிலகி தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை வரவேற்ற குலாம் நபி ஆசாத், பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இதனால், குலாம்நபி ஆசாத் பாஜக ஆதரவாளர் என்றும், பாஜக கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள்  குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய  குலாம் நபி ஆசாத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆகஸ்டு த 14ஆம் தேதி,  காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியஆசாத்,  இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிக பழமையான மதம் இந்து மதம். 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாம் தோன்றியது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தான், 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இஸ்லாமியர் ஒருவரும் இல்லை. காஷ்மீரி பண்டிட்கள்தான் இருந்தனர்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள், காஷ்மீரிக்கள் என அனைவருக்காகவும் நாங்கள் அரசை கட்டியெழுப்பியுள்ளோம். காஷ்மீரின் உதாரணம் எங்களிடம் உள்ளது.  இது, எங்கள் நிலம், வெளியில் இருந்து யாரும் இங்கு வரவில்லை. உங்களுக்கு எட்டாத பல விஷயங்களை நாடாளுமன்றத்தில் நான் பார்த்திருக்கிறேன். சிலர் வெளியில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சக எம்.பி ஒருவர் சொன்னார். நான் மறுத்தேன்.

நமது இந்துஸ்தானில் இஸ்லாம் தோன்றி வெறும் 1500 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்து மதம் மிகவும் பழமையானது. முகலாயர்களின் காலத்தில் அவர்கள் ராணுவத்தில் இருந்தபோது அவர்களில் 10-20 பேர் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும். மீதமுள்ளவர்கள் இந்து-சீக்கியர்களாக இருந்து மதம் மாறியுள்ளனர். அதற்கு நமது காஷ்மீர் ஒரு உதாரணம்.

600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்த முஸ்லிம் யார்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்டுகள்தான். அனைவரும் இஸ்லாத்திற்கு மாறியவர்கள். எனவே, அனைவரும் இந்த மதத்தில் பிறந்தவர்கள்” என்றார்.

குலாம்நபி ஆசாத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.