டில்லி

ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது. 

சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த கணவன் – மனைவிக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது.

இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை இட்டனர். கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசியதால் மற்ற பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.  மேலும் இவர்களின் சண்டையால் விமான ஜன்னல்களில் ஏதேனும் விரிசல் விழுந்துவிட்டால் விமானமே விபத்துக்குள்ளாகிவிடுமே என அனைவருக்கும் அச்சம் வந்துவிட்டது.

எனவே விமானக் குழுவினர் விமானியிடம் விமானத்தை அவசரமாகத் தரையிறக்குமாறு தெரிவித்தனர்.  விமானம் அப்போது, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்ததால், பாகிஸ்தானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானி அனுமதி கேட்டார். ஆனால், பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது.

எனவே டில்லி சர்வதேச விமான நிலையத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு அந்த விமான நிலையத்தில் ஜெர்மனி விமானம் தரையிறக்கப்பட்டது.  அந்த கணவன் மனைவியை அங்கிருந்த காவல்துறையினரிடம் விமானக் குழுவினர் ஒப்படைத்தனர்.

கணவன் – மனைவி சண்டையால் விமானமே அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.