பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 2000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 55 பேர் பலியாகி இருக்கின்றனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினருக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை பின்பற்றியதால் இப்போது ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, படிப்படியாக கீழ்நோக்கி குறைந்து கொண்டே வருவதாக ராபர்ட் கோச் அறிவியல் மையத்தின் அதிகாரி லோதர் வைலர் கூறியிருக்கிறார்.

ஜெர்மனியில் இதுவரை பள்ளி நடவடிக்கைகள், கை கழுவுதல் குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கைகள் நல்ல பலன்களை தந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.