சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம் கொரோனா சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம்…

Must read

சென்னை:
சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க புதிய செயலியை சென்னை மாநகர கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகப்படுத்தினார்.
‘GCC Vidmed’ என்ற செயலியை மாநகராட்சிஆணையாளர் கோ.பிரகாஷ் முன்னிலையில், சிறப்பு அதிகாரி  ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையில் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டாலும் மற்றொரு புறம் கணக்கிடங்காமலும், கட்டுக்குள் வராமலும் அதிகரித்த வருகிறது.
இந்த நிலையில், சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம்  சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சியின் சார்பில் தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (வீடியோ கால்) 24 மணிநேரமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இதில் கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் இச்செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய வேண்டியிருப்பின், உடனடியாக மருத்துவரின் மூலம் குறுஞ்செய்தி தொலைபேசி அழைப்பு மையத்திற்கு அனுப்பப்படும்.
பின்னர், தொலைபேசி அழைப்பு மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட மண்டல மருத்துவ அலுவல ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமின்றி வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கவும், அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்கனவே 24 மணிநேரம் இயங்கும் தொலைபேசி எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் 100 தொலைபேசி அழைப்புகளுடன் கூடிய தொலைபேசி ஆலோசனை மையம் (Tele Counseling) செயல்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியின் கொரோனா கண்காணிப்பு செயலியின் மூலம் காய்ச்சல் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு இந்த தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து தொடர்பு கொண்டு தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article