மும்பை: பிசிசிஐ அமைப்பின் தேர்வு கமிட்டியின் நடவடிக்கைகள் மற்றும் கேப்டன் விராத் கோலிக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரமான செயல்பாட்டு உரிமை ஆகியவை குறித்து விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறியுள்ளதாவது, “மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணியை தேர்வு செய்யப்பட்டுள்ள விதம் குறித்து எதுவும் புரியவில்லை. எல்லாம் சரியாகத்தான் நடக்கிறதா? என்ற குழப்பம் இருக்கிறது.
இந்திய தேர்வுக் கமிட்டியின் செயல்பாடுகள் நொண்டி வாத்தைப் போல் இருக்கிறது. அணியை தேர்வுசெய்வது குறித்து கருத்துக்கூற கேப்டனாக மறுநியமனம் செய்யப்பட்ட விராத் கோலி அழைக்கப்படுகிறார்.
கேதார் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றோர் உலகக்கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாத காரணத்தால் அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட மோசமாக விளையாடிய விராத் கோலி இன்னும் கேப்டனாக தொடர்கிறார். உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டியை எட்டவில்லை என்பது மறக்கப்பட்டுவிட்டது.
விராத் கோலிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஒரு மீட்டிங் கூட நடத்தாமல், விராத் கோலி கேப்டனாக தொடர எப்படி அனுமதிக்கப்படுகிறார்? என்பதே புரியவில்லை. மீட்டிங் நடத்துவதுதான் விதிமுறை” என்று தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
கவாஸ்கர் நேரடியாக விராத் கோலியை குறிவைத்து, அவரின் கேப்டன் பதவியை பறிக்க வேண்டுமென சொல்லாமல் சொல்கிறார் என்றும், அப்பதவி ரோகித் ஷர்மாவிற்கு வழங்கப்பட வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றும் சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.