விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்த சர்வதேச கும்பலைச் சேர்ந்த நபரை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேரி பிரான்சிஸ்கோ என்ற அந்த பெண் சென்னையில் இருந்து சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு செல்ல இருந்த நிலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனடா நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர், 2018 ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் இலங்கையில் இருந்து சென்னை வந்த மேரி பிரான்சிஸ்கோ கடந்த சில ஆண்டுகளாக அண்ணா நகரில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
வாடகை ஒப்பந்த பத்திரம் மூலம் கேஸ் இணைப்பு மற்றும் வங்கி கணக்கை துவங்கிய இவர், இடைத்தரகர்கள் மூலம் பான் கார்ட், ஆதார் கார்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.
சென்னையில் இருந்து செயல்பட்டு வந்த இந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அடங்கிய சர்வதேச கும்பலுடன் தொடர்பில் இருந்தார்.
ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, டென்மார்க், கனடா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுடன் இனைந்து செயல்பட்டு வந்த மேரி பிரான்சிஸ்கோ, இந்திய வங்கிகளில் செயலற்று இருக்கும் கணக்குகளில் (Dormant Account) உள்ள நிதியை போலி ஆவணங்கள் மூலம் எடுத்து அவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தார்.
மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செயலற்று இருக்கும் ஒரு கணக்கில் இருந்து பெரும்தொகையை எடுப்பதற்காக திட்டமிட்டிருந்த இந்த கும்பலைச் சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ மும்பை செல்ல காத்திருந்த போது தமிழக போலீசாரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, 2021 அக்டோபர் மாதம் போலீசார் கைது செய்த சத்குணம் (எ) சபேசன் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து வருவதால், மேரி பிரான்சிஸ்கோ தொடர்பான வழக்கையும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி இருக்கிறது.