சென்னை: கொரோனா பரவலைக் கையாண்டதன் மூலம், எதிர்காலத்தில், வேறெந்த தொற்றுநோய் பரவலையும் கையாளக்கூடிய அனுபவமும் திறனும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறையின் இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகம்.
அவர் கூறியுள்ளதாவது, “பொது சுகாதாரத் துறையின் சேவை செயல்பாட்டில், கொரோனா என்பது உண்மையிலேயே மேம்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெறப்பட்ட அனுபவமானது, எதிர்காலத்தில் வேறெந்த தொற்றையும் கையாளும் அனுபவத்தையும் திறனையும் அளித்துள்ளது. H1N1 என்ற தொற்றுநோயும் இதில் அடக்கம்.
நம்மிடம், வலுவான மருத்துவக் கட்டமைப்பும், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மனித ஆற்றலும் உள்ளன. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டு பணிகள் தற்போது செயல்பாட்டில் இருக்கையில், பிரிட்டனில் துவங்கியுள்ள புதியவகை வைரஸின் பரவல் புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
பொதுமக்கள், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் கூட்டத்தை தவிர்த்தல் உள்ளிட்டவைகளை எப்போதும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.