சென்னை:
த்திய அரசின் கெயில் பைல்லைன்  திட்டத்தால் தமிழக விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம்  நடத்தினர். இதன் காரணமாக கெயில் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இதுகுறித்து தமிழக அனைத்துக்கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கெயில் திட்டத்தை மாற்றுபாதையில்  நிறைவேற்றுங்கள் என்று கோரி வருகின்றனர். இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு  கெயில்  பைப்லைன்  திட்டத்தை மாற்று பாதையில் கொண்டு செல்ல முடியுமா என  மறுஆய்வு செய்யுங்கள் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் கெயில் திட்டத்தை மாற்று பாதையில் நிறைவேற்ற முடியாது என  கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு குறிப்பாக மேற்கு பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி அறிக்கை:
கெயில் திட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக இருந்தது, மத்திய அரசும், கெயில் நிறுவனமும் சேர்ந்து இந்தப் பிரச்சினையில் மறு பரிசீலனை செய்யக் கூடும் என்பதாக இருந்தது.
ஆனால் 24-7-2016 அன்று காலையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில் நாம் அதிர்ச்சியடையத் தக்க வகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அதாவது தமிழகத்தில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில், மத்திய அரசு “கெயில் பைப்லைன்” திட்டத்திற்கு மாற்று வழி காண வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்காது என்பது தான் அந்தச் செய்தி.
திமுகவைப் பொருத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபம் இல்லை. எனினும், அந்தக் குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டுமென்று தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் கூறும்போது, மத்திய அரசு இந்தப் பிரச்சினை பற்றி கெயில் நிறுவனத்துடன் ஆலோசித்த போது, தமிழக அரசும், விவசாயிகளும் விரும்புவதைப் போல நெடுஞ்சாலைகள் வழியாக உயர் அழுத்தக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது, மேற்கு மண்டல விவசாயிகளிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்றும் தெரியவில்லை.
மத்திய அரசும், குறிப்பாக பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு மிகவும் துணையாக இருப்பதாகப் பேசியுள்ள முதல்வர் ஜெயலலிதா, விவசாயிகளின் முக்கியமான இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.