மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்து அறிவித்துள்ள நிலையில், தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (19ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்திலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அங்கும் பொதுமுடக்கம் அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.
மதுரையில் இதுவரை 705 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ந்தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் நாளை முதல் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது.