சென்னை: மதுரை ஆதீனம் மடத்தின் 293வது பீடாதிபதியாக பதவி ஏற்றுவிட்டேன் என்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான  தலைமறைவு நித்தியானந்தா மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை சைவ ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதியாக இருந்து வந்த  அருணகிரிநாதர் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அடுத்த அதீனம் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த அருணகிரிநாதர் உயிருடன் இருந்தபோது,  சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சைக்குரிய சாமியார், நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, அது சர்ச்சையான நிலையில், அவரை அதிரடியாக நீக்கினார். இது தொடர்பான  வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில்தான், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் புதிதாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனத்தின்  இளைய சன்னிதானமாக நியமித்தார். அதீன மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், நித்தியானந்தாவோ, தான்தான் மதுரை ஆதீனத்தின் அடுத்த ஆதீனம் என்று கூறி வருகிறார்.  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள  அவரை பிடிக்க, கர்நாடகா மற்றும் குஜராத் மாநில காவல்துறையினர்  சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன்  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், நித்தியானந்தோவோ, கைலாசா என்ற இந்து தேசத்தை உருவாக்கி விட்டதாக அறிவித்து அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு அலப்பறை செய்து வருகிறார்.

இந்த நிலையில்தான், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நிலை மோசமானதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி நான்தான் என்று சுவாமி  அறிவித்தார்.  இதையடுத்து,  மதுரை  ஆதினம் அருணகிரிநாதன் பயன்படுத்திய அறைக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  ஹரிஹரர் தேசிகர் மதுரை ஆதீனமாக 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழலில்தான், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பதவி ஏற்று விட்டதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.  அனைத்து மத, தர்ம, கலாசார முறைப்படி, மதுரை ஆதீன மடத்தின் 293-ஆவது ஆதீனமாக பதவியேற்றுக் கொண்டதாகவும் இனி, பக்தர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே ஆசி வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது பெயர்,  293-வது ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் எனவும் மாற்றி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் மறைந்த அருணகிரி நாதருடன் நித்தியானந்தா இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டு உள்ளது.

நித்தியின் இந்த திடீர் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://patrikai.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-%e0%ae%85%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%86%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/