புதுடெல்லி: இந்தியா தனது எரிபொருள் பயன்பாட்டுத் தேவையில் 65% அளவை மீண்டும் பெற்றுள்ளதாகவும், அடுத்த மாதம் பொருளாதார நடவடிக்கைகள் மீள்துவக்கம் பெறுகையில், இந்தியாவின் எரிபொருள் தேவை பழைய நிலையை அடையும் என்றும் தெரிவித்துள்ளார் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அவர் கூறியுள்ளதாவது, “எரிபொருள் தேவையில், இந்த உலகம் இதுவரையில்லாத அளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு, திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
பல நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலைமை பரவாயில்லை. கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன், 2019ம் ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடப்பட்ட நிலையில், எரிபொருள் பயன்பாடு 30%-35% வரை குறைந்தது.
ஊரடங்கு காலக்கட்டத்திலிருந்து இப்போது வரை, பெட்ரோலிய சுத்திகரிப்பு பெரியளவில் துவங்கவில்லை. இந்த மே மாத வாக்கில், எரிபொருள் தேவை, வழக்கமான தேவையில் 65% என்ற அளவை மீண்டும் எட்டியது (அதாவது, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில்). எனவே, வரும் ஜுன் மாத வாக்கில், எரிபொருள் தேவை பழைய நிலையை முழுமையாக அடையும்” என்றார்.
உலகின் இரண்டாவது அதிக எரிபொருள் பயன்பாட்டாளரான சீனாவில், தற்போதைய நிலையில் எரிபொருள் தேவையின் அளவு, பழைய நிலையோடு ஒப்பிடுகையில் 90% வரை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.