சென்னை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். மேலும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
நாளை வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், வரும் 23 ஆம் தேதி சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், வரும் 24ம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
இன்று சென்னையில் வானம் மேக மூட்டமாகக் காணப்படும்; ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நேற்றைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.