மும்பை

ரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டது.  குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.,  அகில இந்திய அளவில் இம்மாநிலம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.  ஆனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இங்குக் குறைந்து வருகிறது.   இதையொட்டி ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வரும் அக்டோபர் 4 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.  இது குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், “வரும் அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து முதல்வர் அனுமதிக்கிணங்க மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு 5 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்.  நகர்ப்புறங்களில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மும்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அந்தந்த பகுதிகள் நிலவரம் குறித்து பகுதி அதிகாரிகள் முடிவு செய்யலாம்.

மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அரசு தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் தான் பள்ளிக்கு வர வேண்டும்.  தேர்வு மற்றும் எந்த ஒரு நலத்திட்டத்துக்கும் வருகை பதிவேடு கட்டாயம் இல்லை.  மாணவர்கள் விரும்பினால் ஆன்லைனிலும் கல்வி கற்கலாம்.    அனைத்து பாடங்களும் யூ டியூபிலும் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.