மும்பை : செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குரல் மூலமான கொரோனா பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம்

Must read

மும்பை

மும்பை மாநகராட்சி அடுத்த வாரத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குரல் மூலமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது.   சுமார் 4 மாதங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சம் ஆகி உள்ள நிலையில் அடுத்த 10 லட்சம் பேருக்கு மூன்று வாரங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் பரவி உள்ளது.  எனவே கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பலருக்கு அறிகுறிகளின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.  தற்போது பலருக்கு கொரோனா பாதிக்கப்பட்டும் அறிகுறிகள் தெரிவதில்லை.    எனவே புதியதாகப் பல பரிசோதனை முறைகள் கண்டறியப்பட்டு வருகின்றன.  மாசசூசெட்ஸ் லிங்கன் ஆய்வகத்தைச் சேர்ந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தெரியாமல் உள்ளோரின் குரலை ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வின் முடிவில்  கொரோனா பாதிப்பு அடைந்தோரின் குரல் மாதிரிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வித்தியாசம் தெரிய வந்துள்ளது.   ஒருவர் பேசும் போது ஒலியை உண்டாக்கும் காற்று குரல்வளையை சார்ந்த திசுக்களைக் கடந்து வருகிறது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் திசுக்கள் வீக்கமுற்றுள்ளதால் இவற்றை காற்று கடந்து வரும் போது குரலின் தன்மை மற்றும் தொனி மாற்றத்தைச் செயற்கை நுண்ணறிவு மூலம் சுலபமாகக் கண்டறிய முடியும்.

எனவே இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் அமைந்துள்ள குரல் பரிசோதனை மூலம் கொரோனா பாதிப்பைக் கண்டறிய மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  அடுத்த வாரம் முதல் இந்த கொரோனா பரிசோதனை மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.   இதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலியில் ஒருவரது குரல் ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் பதியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுப் பாதிப்பு கண்டறியப்பட உள்ளது.

தற்போதைய ஆர்டி – பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் தெரியக் குறைந்த பட்சம் 24 மணி நேரம் ஆகும்.   ஆனால் இந்த சோதனை முடிவுகள் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு தெரிய வரும் என கூறப்படுகிறது   எனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரை உடனுக்குடன் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை செய்ய முடியும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

More articles

Latest article