கடந்த 2011ம் ஆண்டு மொஹாலியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில், தோனிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கும் உருவான நட்பு தற்போது வரை தொடர்கிறது.

அந்த மொஹாலிப் போட்டியில் டிக்கெட் பெறுவதற்கு, முகமது பஷீர் என்ற அந்த ரசிகருக்கு தோனிதான் உதவி செய்தார். அப்போது உருவான அவர்களின் நட்பு, இன்றுவரை தொடர்ந்து நீடித்து பலப்பட்டு வருகிறது.

தற்போது உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள போட்டியைக் காண்பதற்கும் இவர் வருகை தந்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரெஸ்டாரன்ட் நடத்தும் இவர், 6000 கி.மீ. பயணம் செய்து இப்போட்டி‍யைக் காண வந்துள்ளார்.

அந்தப் போட்டிக்கான டிக்கெட்டை இவர் இன்னும்வாங்கவில்லை என்றாலும், தோனி கட்டாயம் ஏற்பாடு செய்துவிடுவார் என்று கூறியுள்ளார்.

இப்போட்டிக்காக, பலரும் 800 முதல் 900 பவுண்டுகள்கூட செலவழித்து டிக்கெட் வாங்க தயாராக உள்ளனர். இந்த தொகை, சிகாகோவிலிருந்து ரிடர்ன் டிக்கெட் பெறும் தொகைக்கு சமமானது. இந்த 63 வயது கிரிக்கெட் ரசிகர் பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்தவர். தற்போது, அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அந்நாட்டின் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.