ஹங்கேரி-யில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு செல்வதாக நினைத்து ருமேனியா நாட்டில் உள்ள புக்கரெஸ்ட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்த நண்பர்கள் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோபியா அலைஸ் என்ற டிக் டாக் பிரபலம் தனது ஆண் நண்பர் பென் கென்னடி-யுடன் சுற்றுலா செல்ல நினைத்தார்.

நியூஸிலாந்து நாட்டில் இருந்து வந்த பென் கென்னடி, சோபியா அலைசுடன் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டார்.

இதற்காக ரேயான் ஏர் விமான நிறுவனத்தில் விமான பயணசீட்டு வாங்கிய அவர் புடாபெஸ்ட் செல்வதாகக் கூறி தனது தோழியை அழைத்துக் கொண்டு விமான நிலையம் வந்தார்.

அங்கு அவர்கள் புடாபெஸ்ட் செல்வதற்கு பதில் புக்கரெஸ்ட் செல்லும் விமானத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் நிற்க வைக்கப்பட்டனர்.

பெயர்பலகையில் புக்கரெஸ்ட் என்று இருப்பதைப் பார்த்த அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த டிக்கெட்டை பார்த்துள்ளனர் அதிலும் புக்கரெஸ்ட் என்று இருந்ததைப் பார்த்து இருவரும் சிறிது நேரம் குழம்பிப்போய் நின்றுள்ளனர்.

பின்னர் வெளிநாடு செல்வதென்று முடிவாகிவிட்டது அது எந்த நாடாக இருந்தால் என்ன என்று விமானம் ஏறி ருமேனியா நாட்டை ருசிக்க ருசிக்க ரசித்துள்ளனர்.

புடாபெஸ்ட்-க்கும் புக்கரெஸ்ட்-க்கும் வித்தியாசம் தெரியாமல் தனது நண்பர் செய்த குழப்பத்தால் திக்குமுக்காடிப் போன விவரத்தை டிக் டாக் பிரபலம் சோபியா அலைஸ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.